தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படியில் திமுக 4 உறுப்பினர்களையும் அதிமுக 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும். மேலும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில் அதிமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு தலா ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக தனது 2 இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்து. அதன் படி திமுக தரப்பில் இருந்து திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளனர்.







