குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் (ஜுன் 12) மதியம 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் இருந்தார்.
இந்த விமானம் வானில் பறந்த ஒரு சில நிமிடங்களிலே அதாவது தரையில் இருந்து 825 அடி உயரத்தை எட்டியபோது விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மே டே அழைப்பு’ வந்தது. ‘மே டே அழைப்பு’ என்பது சர்வதேச அளவில் அபாயத்தை தெரிவிக்கவும் உடனடி உதவி வேண்டும் என்பதைக் குறிக்கும் ரேடார் சிக்னலாகும். இதனை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அவர்களால் விமானியை தொடர்பு கொள்ள இயலவில்லை.








