2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 10 மணி அளவில் இந்த பட்ஜெட் தாக்கலை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். ”சென்ற ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை தவழும் மழலை; இந்த ஆண்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை நடக்கும் குழந்தை. இனிவரும் ஆண்டுகளில் வேளாண் நிதி நிலை அறிக்கை ஒடுகிற குழந்தையாய் இருக்கும்”, என கூறி தனது வேளாண் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வேளாண் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:
- குறுவை சாகுபடி திட்டத்தால் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்: சிறுதானியங்கள், எண்ணெய் விதைகள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- 2020-2021ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
- நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு
- 3,204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்
- இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ரூ.5 கோடி மதிப்பில் 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்க நடவடிக்கை.
- நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, அரசு விதை பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்ய 20,000 விவசாயிகளுக்கு மானிய அளவில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு.
- விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30,000 மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.







