‘அக்னிபாத்’: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

மத்திய அரசின் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக தெலங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள்…

மத்திய அரசின் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக தெலங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.

ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னையிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகில், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கினர்.

போராட்டம் நடத்திய இளைஞர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.