கொரோனா தடுப்பூசி: உத்தரவாதம் அளிக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர்!

தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப்…

தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயர்நீதிமன்றத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார். கொரோனா 2வது அலை கையை மீறிச் சென்றுவிட்டதாக தலைமை வழக்கறிஞர் கூறியதற்கு பதிலளித்த அவர், “தலைமை வழக்கறிஞர் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பை குறிப்பிட்டார்” என விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10,000- 12,000 பேர் வரை பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உலகளவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று வந்திருப்பதாகவும், தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கமும் அளித்தார். மேலும், தமிழகத்தில் 83, 316 படுக்கைகள் உள்ளதாகவும், அடுத்த 10 நாட்களில் 1.10 லட்சம் படுக்கைகளாக உயர்த்தப்படும் எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.