திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் பட்டியலின மக்கள் சுவாமியை தரிசித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சுமார் 80 வருட காலமாக கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், முத்துமாரியம்மன் கோயில் கருவறையில் உள்ள சுவாமியை உள்ளே சென்று தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி பட்டியலின மக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் கோரிக்கை மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, பட்டியலின மக்களும் கருவறையில் உள்ள அம்மனை வழிபடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1,000 போலீஸ் மற்றும் துணைராணுவம் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டு இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பூஜை பொருட்களுடனுடனும், பக்தி முழக்கங்களுடனும் ஊர்வலமாக சென்ற பட்டியலின மக்கள், கோயில் கருவறையில் உள்ள அம்மனை இன்று வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டார். 80 வருட கனவு நிறைவேறியதாகவும், அம்மனை தரிசித்த இந்தநாள் தான் தங்களுக்கு தீபாவளி, பொங்கல் எனவும் பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.