தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் “நமக்கு நாமே” திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு மேலும் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவும், பாலங்கள் கட்டவும், சாலைகளை தரம் உயர்த்தவும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளவும் நமக்கு நாமே திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், திட்டப் பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு, பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்ளிட்டவற்றின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள ’நமக்கு நாமே’ திட்டத்திற்காக, தமிழ்நாடு அரசு ஏற்கனவே 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.








