அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சேவை வழங்கும் நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 24 என சுகாதார நலனுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார். வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 389 நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவக் களப் பணியாளர் என 3 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் வாயிலாக மாதத்திற்கு 40 முகாம்கள் என்ற அடிப்படையில் கிராமம் கிராமமாக சென்று மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கிராமப்புறங்களில் இருக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் நீண்ட தூரமுள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. அதுபோலவே, மலை கிராமங்களில் உள்ளவர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு என்றால் அழைத்துக்கொண்டு கீழே இறங்கி வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.








