அமெரிக்க விமானத்தில் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்டாக பெயர் வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன. இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ் தானியர்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானை சேர்ந்தவர்களை மீட்பதற்கான அமெரிக்க விமானப்படை விமானம், ஆகஸ்டு 21 அங்கிருந்து புறப்பட்டது. நடுவானில் 28 ஆயிரம் அடிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, ஆப்கானிஸ் தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.ஜெர்மனியில் உள்ள ராம் ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு விமானம் சென்றடைந்த போது, பெண் குழந்தையை அவர் பெற்றார் என அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.
விமானம் தரை இறங்கிய பின்பு உள்ளே சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் விமானத் தளத்தின் அருகே இருக் கும் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு ‘ரீச்’ என்று பெற்றோர்கள் பெயரிட்டுள்ளனர். அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற அமெரிக்க விமானத்தின் அழைப்பு சமிக்ஞை (call sign) ’ரீச் 828’என்பதாகும். அதனால், ரீச் என்ற பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்துள்ளனர்.









