மாரடைப்பால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் AED எனப்படும் முதலுதவி சாதனம் வைக்கப்பட்டுள்ளது.
சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ முதலுதவி அளிக்க AED சாதனம் பயன்படுகிறது. இந்த முதலுதவி சாதனத்தின் மூலம், உடனடியாக இதயத்துடிப்பை சீராக்க முடியும். இந்த AED சாதனம் விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் AED சாதனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே காவல்துறை சார்பில் நடைபெற்றது.
மேலும், தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தாம்பரம் காவல் கூடுதல் ஆணையர் காமினி, காவல் இணை ஆணையர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக AED சாதனம் சோழிங்கநல்லூர் சிக்னல் செம்மஞ்சேரி காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







