திராவிட மாடலை ஏன் ஏற்க தயங்குகிறது அதிமுக?

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இடையே அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கும் ஒரு புள்ளியாக திராவிட மாடல் எதிர்ப்பு உருவெடுத்துள்ளது.…

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இடையே அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கும் ஒரு புள்ளியாக திராவிட மாடல் எதிர்ப்பு உருவெடுத்துள்ளது. இந்த கட்டுரையை திராவிட மாடல் என்றால் என்ன என்பதற்கு ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் எப்படி மதிப்பிடுகின்றனர் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

திராவிட மாடலை விமர்சிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்:

ஏழை, எளிய குழந்தைகளின் கல்வியை பறிக்கும் செயல் என்பது மட்டுமல்லாமல் சமூக நீதிக்கும் எதிரான செயல். சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதைத்தான் ‘திராவிட மாடல்’ என்று திமுக சொல்கிறது போலும்! தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். திராவிட மாடல் என்று ஒன்று இல்லை. அம்மா மாடல் தான் உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கூறியதையும் இதனையொட்டி குறிப்பிட வேண்டியுள்ளது.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திராவிட மாடல்:

“மக்கள் விரும்பாத ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடக்கிறது. ஒரு அரசாங்க மேடையில், வரம்பு மீறி திராவிட மாடல், அந்த மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூட ஒன்றிய அரசு என்றோ, திராவிட மாடல் என்றோ கூறவில்லை. தேர்தல் முடிந்த உடன் திடீர் என திராவிட மாடல் என்கிறார். திராவிட மாடல் என்றால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல்” – டி.டி.வி. தினகரன்

இனி என்ன செய்யப்போகிறார்கள்?:

“திராவிட மாடல் என திமுக இப்போது சொல்வதை அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர். செய்திருக்கிறார். ஜெயலலிதா செய்திருக்கிறார். திராவிடம் என்பது எதற்காக வந்தது. ஏழை எளிய மக்களை சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். தங்களுக்கு இது கிடைக்கவில்லையே என்று அவர்கள் நினைக்க கூடாது. அந்த அளவுக்கு அவர்களை உயர்த்த வேண்டும் என்பது தான். அது போன்ற திட்டங்களை செய்து முடித்தாகிவிட்டது. இவங்க என்ன புதிதாக செய்யப்போகிறார்கள்?” என்கிறார் சசிகலா.
திமுக முன்வைக்கும் திராவிட மாடலுக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் முன்வைத்த எதிர்வினைகள் இவை. இவற்றோடு இணைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய திராவிட மாடல் விளக்கத்தையும் பார்க்கலாம். திராவிட மாடலுக்கான விளக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தான் பங்கேற்ற பல மேடைகளில் தொடர்ச்சியாக பேசி வந்தார். பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகள் என இரண்டு இடங்களில் அவர் பேசிய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.

திராவிட மாடல் என்றால் என்ன?

பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தார். அதாவது,
அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் ‘திராவிட மாடல்’ என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை..!

சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம்தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!,

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் என்றால் என்ன என்று பிரதமருக்கு விளக்கம் அளித்தார். அதில்,
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மருத்துவம், திறன்மிகு மனித ஆற்றல் உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு அபரிமிதமான பங்களிப்பை தந்து வருகிறது. பொருளாதாரம் சார்ந்து மட்டும் இன்றி, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதே தமிழ்நாட்டின் வளர்ச்சி. இது தான் திராவிட மாடல்.

திராவிட மாடல் பொருளாதாரம்:

இந்தியாவின் பல்வேறு மாடல்கள் நடக்கின்றன. குறிப்பாக, குஜராத்தை மையமாக வைத்து குஜராத் மாடலை 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரச்சாரம் செய்தது. மகாராஷ்ட்ராவின் தொழில் துறையை முதன்மையாக வைத்து மகாராஷ்ட்ரா மாடலும் பேசு பொருளாகி இருக்கிறது. கொரோனாவை கையாண்ட விதத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததால் கேரளா மாடல் முன்வைக்கப்பட்டது. அதே போல், 2-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆட்சியைக் கைப்பற்றிய போதும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்த போதும் டெல்லி மாடல் பேசப்பட்டது.

இந்நிலையில் தான், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அடைந்துள்ள ஒட்டு மொத்த வளர்ச்சிகளின் அடிப்படையைக் கொண்டு தான் திராவிட மாடல் என்ற கருத்தாக்கத்தை திமுக முதன்மையாக பேசுகிறது. திராவிட மாடல் என்பது ஒருங்கிணைந்த கிராம, நகரங்களின் வளர்ச்சியை முதன்மையாக கொண்டுள்ளதை குறிப்பிட வேண்டி இருக்கிறது.
கிராமங்களின் பொருளாதார கட்டமைப்பும், நகரங்களின் தொழில் வளமும் ஒருங்கிணைந்த புள்ளியாக மாறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் போக்குவரத்து சேவை என்பது கிராமங்களில் இருந்த மக்களை தொழிலுக்காக நகரங்களை நோக்கி நகர்த்தியது. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்காமல் தொழில் வளத்தின் நன்மைகளை கிராமத்தினரும் அனுபவித்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுத்து பெண்களையும், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றிற்காக நகரங்களை நோக்கி நகர்த்தினார். இங்கு தான், முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடுவது போல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மருத்துவம், திறன்மிகு மனித ஆற்றல் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அபரிமிதமான பங்களிப்பை தந்து வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

திராவிட மாடலை அதிமுக எதிர்க்கலாமா?:

தன்னை திராவிட கட்சி எனக் கூறிக்கொள்ளும் அதிமுக தான் இன்று திமுக முன்வைக்கும் திராவிட மாடலை கடுமையாக எதிர்க்கிறது. அதாவது, கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சிக்கு அதிமுகவின் பங்களிப்பும் முக்கியமானது. கடந்த 50 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் அதில் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை அதிமுக தான் ஆட்சி செய்துள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சியின் பங்களிப்பும் இன்றியமையாதது. ஆனால், திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே அதிமுக தனது சாதனைகளை தங்களுக்குள் சுறுக்கிக்கொள்ளும் நிலையை திராவிட மாடல் எதிர்ப்பு விஷயத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. திமுக கூறும் திராவிட மாடல் என்பது அதிமுகவால் ஏற்பட்டது என்று சொந்தம் கொண்டாட அதிமுக தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தேசிய கட்சிகளின் செல்வாக்கு தமிழ்நாடு அரசியலில் ஏற்படாது என்று கூறும் போது மட்டும் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நீடிக்கும் என்று கூறும் அதிமுக, திராவிட மாடல் விஷயத்தில் மட்டும் தங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவது வரலாற்று முரணாகப்படுகிறது.

பாஜகவின் குராலாக ஒலிக்கிறதா அதிமுக:

திராவிட மாடல் என்ற கோஷத்தை முதன் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் முன் வைத்த போது பாஜக தான் அதனை எதிர்த்தது. பாஜகவின் வானதி சீனிவாசன், மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமல் எப்படி தமிழ்நாடு வளர்ந்திருக்க முடியும் எனக்கேள்வி எழுப்பினார். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்களிப்பு இருக்காதா? என்றும் வினவினார். இதே குரலாகத்தான் அதிமுகவும் இன்று ஒலிக்கிறது. பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால் திமுக முன்வைக்கும் திராவிட மாடலை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள். திமுக தங்கள் ஆட்சியில் நடந்த வளர்ச்சியை அண்ணா மாடல் என்றோ, கருணாநிதி மாடல் என்றோ திமுக கூறவில்லை. ஆனால், அதிமுக மட்டும் எம்.ஜி.ஆரின் சாதனைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அம்மா மாடல் என்ற ஒன்றை முன்வைக்கிறது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டும் வகையில், திராவிட செல்வி என்று தி.க. தலைவர் கி. வீரமணி குறிப்பிட்டார். ஆனால், அதிமுக தற்போது ஜெயலலிதாவை திராவிட செல்வி என்றும், அதிமுக கட்சியை அவர்கள் திராவிட கட்சி அல்ல என்று கூறுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

கொள்கை வேறு கூட்டணி வேறு என்ற பிரபலமான அரசியல் சொல்லாடல் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தியாவில் எதிரொலிப்பதைக் காணலாம். இந்நிலையில், திராவிட கட்சி என்று சொல்லும் அதிமுக திராவிட மாடலை விமர்சிப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.