ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே சி பி பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியால் தள்ளுபுடி செய்யப்பட்டன.

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நாட்கள் நடைபெற்ற வாதங்கள் ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தன. அப்போது இருதரப்பினரின் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்து வந்த பாதை -

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஓபிஎஸ் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் தாம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது எனவும், இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல் ஈபிஎஸ் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2022-ம் ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே, காலதாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என இபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இருதரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.