அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக செபி என அழைக்கப்படும் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் வரும் திங்கட்கிழமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டார் அதானி.
அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதால் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசியும், எஸ்பிஐ வங்கிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையும் படியுங்கள்: நல்ல பாடல் உருவாவது எப்படி? – டிப்ஸ் கொடுத்த இளையராஜா
இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மனோஜ் திவாரி, எம்.எல்.சர்மா ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், ஹிண்டென்பர்க் அறிக்கை நாட்டிற்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை ஒரு சதித்திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எம்.எல்.சர்மா ஆஜராகி, குறுகிய காலத்திற்குள் அதானி குழும பங்குகள் ரூ.2200-ல் இருந்து ரூ.600-க்கு குறைந்துள்ளதற்கு செபி அமைப்பு தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் செபி அமைப்பு அவ்வாறு தடை செய்யவில்லை. எனவே இதில் உள்நோக்கம் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக செபி வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.








