தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாவும், புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக பயன்படுத்துவதாகவும் நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின்பேரில் அவருடைய வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் அஜித், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வெற்றிபெற்ற “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் “உத்தம வில்லன்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “நிமிர்ந்து நில்”, “சீதக்காதி” உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருவதால் அவ்வப்போது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.
“புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தனது வீட்டில் உள்ள ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன்கள் உள்ளிட்ட 8 லட்சம் ருபாய் மதிப்புள்ள பொருட்களை திருடினார்” என்று நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபாஷ் சந்திரபோஸிடம் விசாரணை நடத்தினர். கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ், நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தான் கொடுத்த புகாருக்கு நுங்கம்பாக்கம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது புகைப்படத்தை பொதுவெளியில் தவறாக வெளியிடுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை பார்வதி நாயர் மீண்டும் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை அதிகப்படுத்தினார். விசாரணை ஒரு தலைபட்சமாக நடைபெறுவதாக சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 3ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்தார். இருவரும் மாறி மாறி புகாரளித்து திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் இறுதியாக கொடுத்த புகாரில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இந்த புகாரின் பேரில் சுபாஷ் சந்திரபோஸை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.










