‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்… ஒருபக்கம் வரவேற்பு… மறுபக்கம் விமர்சனம்…

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒருபக்கம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் அந்தப் பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு……

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒருபக்கம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் அந்தப் பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில், ரஞ்சிதமே பாடலில் பல    பாடல்களின் கலவைகள் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். பாடலின் ஆரம்பத்தில் வரும் மியூசிக் கன்னட படமான “பொகரு” படத்தில் உள்ள “கரபு” பாடலின் இசையில் இருந்து கொஞ்சம் உருவியதாக மீம்ஸ்கள் பறந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டுமின்றி இந்த பாடலின் இசை அஜித் நடித்த “அவள் வருவாளா” படத்தின் சிக்கி முக்கி உய்யாளா பாடலின் மெட்டு எனக் கூறும் ரசிகர்கள் காப்பி அடித்த பாடலையே காப்பி அடித்தது தான் ரஞ்சிதமே பாடல் என தங்களின் கலாய்க்கும் திறமைகளை ஒட்டு மொத்தமாக கொட்டி வருகின்றனர்.

இதைவிட பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்த மொச்சக்கொட்ட பல்லழகி என்ற நாட்டுப்புற பாடலின் சாயல், ரஞ்சிதமே பாடலில் இருப்பதாகவும் மீம் கிரியேட்டர்கள் தங்கள் பங்குக்கு தாழித்து வருகின்றனர்.

பிற பாடல்களை விடாத தமன் தனது இசையில் உருவான பாடலை விட்டுவிடுவாரா என்பது போல, ஒஸ்தி படத்தில் தான் இசையமைத்த வாடி வாடி வாடி கியூட் பொண்டாட்டி பாடல் இசையையும் ரஞ்சிதமே பாடலில் தமன் கொஞ்சம் அள்ளித் தெளித்துள்ளார்.

மேலும், பாடலில் ராஷ்மிகா மந்தனா ஆடும் போது அவர் காலில் இருந்த கொலுசு கழன்று விழுந்த நிலையில் நடனத்தில் மூழ்கிய ராஷ்மிகா, அதனை கவனிக்காமல் தன்னை மறந்து குத்தாட்டம் போட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமன் இசையமைப்பில் புதிய பாடலை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பல பாடல்களின் கலவைகள் கலந்து உருவான ரஞ்சிதமே பாடல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் சிலர் குமுறி வருகின்றனர்.

இருப்பினும், தமன் இசையில் விஜயின் பாடலோ, டீசரோ வந்தால் அதனை உலகமெங்கும் டிரெண்ட் செய்து புதிய சாதனை படைக்கும் பழக்கமே அவரது ரசிகர்களின் வழக்கம். அதன்படி, விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோரின் எனர்ஜி குறையாத ஆட்டத்தில் வெளியான ரஞ்சிதமே பாடல் யூடியூப்பில் 2 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.

  • விஜய், நியூஸ் 7 தமிழ், சென்னை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.