தனி நீதிபதி விதித்த ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகையை வழங்க விருப்பமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கொரோனா நிவாரண நிதியாக செலுத்துமாறு தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை என்றும், வரிச்சலுகையை மட்டுமே எதிர்ப்பார்க்கிறோம் எனவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தை நாடியதற்காக தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை நீக்க வேண்டும் என்றும், வணிக வரித்துறை விதிக்கும் வரியை ஒரு வாரத்தில் செலுத்த தயாராக இருப்பதாகவும் விஜய் தரப்பிக் கூறப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் அபாரத்திற்கும் தடை விதித்தனர்.
இந்நிலையில், வரிவிலக்கு கோரிய நடிகர் விஜயின் வழக்கு, தனிநீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா நிவாரண நிதியாக தன்னுடைய தரப்பில் இருந்து அரசுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கி இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றம் விதித்த ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகையை கொரானா நிவாரண தொகையாக வழங்க விருப்பம் இல்லை என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவுக்கு நேற்று இடைக்கால தடை விதிக்கப்பட்டதையும் விஜய் தரப்பினர் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து இந்த வழக்கை முடித்துவைத்து தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.