திருமனம் செய்து கொள்வதாக கூறி பணமோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீதான வழக்கில் விசாரணையின் நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வித்ஜா என்பவர் நடிகர் ஆர்யா மீது சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் அளித்த இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வித்ஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாயிஷாவை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி, ஆர்யா பண மோசடியில் ஈடுபட்டதாக விட்ஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல் குமார், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.







