வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்தத் தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நாளை தீர்ப்பளிக்கிறார்.
நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
நடிகர் விஜய் தொடுத்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித் துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.
முன்னதாக, விஜய் ஏற்கெனவே ரோல்ஸ் ராயல்ஸ் கார் விவகாரத்தில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








