அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச

இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச இன்று ராஜினாமா செய்தார். கோத்தபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,…

இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச இன்று ராஜினாமா செய்தார்.

கோத்தபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு நேற்று தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார்.

அங்கிருந்தபடி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப அபேவர்தனவுக்கு இமெயில் மூலம் அனுப்பி உள்ளார். இதையடுத்து, அவரது ராஜினாமாவை ஏற்பதற்கான அரசு ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது. மேலும், ராஜினாமாவுக்கான அசல் கடித்ததை சபாநாயகர் கோரியுள்ளார். இதையடுத்து, அதனை அனுப்பிவைக்க கோத்தபய ராஜபக்ச ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, அதிபர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனில், பதவியில் இருந்து நீக்க நேரிடும் என கோத்தபய ராஜபக்சவிடம், சபாநாயகர் கூறி இருந்தார். இதனையடுத்து, அவர் தனது ராஜினமா கடிதத்தை இமெயில் மூலம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சவின் ராஜினமா குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத், கோத்தபய ராஜினாமா செய்துவிட்டதால் இலங்கை தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து கொண்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சி, கோத்தபய ராஜபக்ச ராஜினமா செய்திருக்க மாட்டார் என்றும், மாலத்தீவு அரசின் அறிவார்ந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றும் இலங்கை மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் முகம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.