கோலிவுட்டில் இந்த வாரம் விஜய் சேதுபதியின் ”காந்தி டாக்ஸ்”, அட்டக்கத்தி தினேஷின் ”கருப்பு பல்சர்”, கிஷோரின் ”மெல்லிசை”, அனுபமா பரமேஸ்வரனின்
”லாக்டவுன்” மற்றும் வடிவுக்கரசியின் ”க்ராணி”, ஆகிய 5 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
”காந்தி டாக்ஸ்”
மராத்தி இயக்குனரான கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதிராவ் ஹைதாரி உள்ளீட்டோர் நடித்துள்ள படம் காந்தி டாக்ஸ்.
இது அந்த கால பாணியிலான மவுனப்படம். எந்த கேரக்டரும் பேசமாட்டார்கள். ஆனால், பாடல்கள் மட்டும் இருக்கும். மும்பையில் ஏழ்மையான நிலையில் வசிக்கும் விஜய்சேதுபதி வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். நோயாளியான அம்மா, எதிர் வீட்டு காதலி, போகுமிடங்களில் ஏமாற்றம், பணக்கஷ்டம் என தவிக்கிறார். ஒரு விபத்தால் தனது சொத்துகளை இழந்து தவிக்கும் தொழிலதிபர் அரவிந்த் சாமி வீட்டில் புகுந்து திருட நினைக்கிறார். ஒரு நாள் இரவில் அவர் பங்களாவுக்குள் செல்லும்போது தனது வீட்டை தீ வைத்து கொளுத்த திட்டமிடுகிறார் அரவிந்த்சாமி. அது ஏன்? அந்த வீட்டில் இருந்து விஜய்சேதுபதி தப்பித்தாரா? இதுதான் காந்தி டாக்ஸ் படத்தின் கதை.
மனித உணர்வுகள், ஏமாற்றம், தோல்வி, அவமானம், குறிப்பாக பணத்தேவை, பணக்கஷ்டம், பணத்தின் அருமை பற்றி அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர். மவுன படம் என்பதால், டயலாக் இல்லாத காரணத்தால் டக்கென சில விஷயங்கள் புரியாது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அட, சூப்பர் கருத்தாச்சே என பீல் பண்ணலாம். வசனங்கள் பேசாவிட்டாலும் தனது உடல் மொழியால் சிறப்பாக நடித்து இருக்கிறார் விஜய்சேதுபதி. பணக்கஷ்டத்தில், ஏமாற்றத்தில் அவர் தவிக்கிற காட்சிகள் அருமை.
வேலை கேட்டு செல்வது, காதல், அரவிந்த்சாமி வீட்டுக்குள் சுற்றுவது என பல இடங்களில் நல்ல நடிப்பை தந்து, கிளைமாக்சில் வாழ்க்கையின் அர்தத்தை அழகாக சொல்கிறார். பணத்தை, குடும்பத்தை இழந்து தவிக்கிற கேரக்டரில் அரவிந்தசாமியும் கலக்கியிருக்கிறார். எதற்காக வீட்டை கொளுத்த நினைக்கிறார். அவர் திட்டம் என்ன என்பது புதுமை. இவர்களை தவிர, காதலியாக வரும் அதிதிராவ், பக்கத்து வீட்டுக்காரர்கள், அந்த பிக்பாக்கெட் திருடன், அரசியல்வாதி என பலரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். வசனங்கள் இல்லாவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் என பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் மட்டும் அவர் ஸ்டைலில் இல்லை.
மவுனப்படம் என்பதால் சில விஷயங்கள் குழப்பமாக இருக்கும், இயக்குனர் சொல்ல வருகிற கருத்து மற்றும் நீதி ஆகியவை புரிய கஷ்டப்படலாம். அரவிந்த்சாமி வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் நீளம். கமர்ஷியல் விஷயங்கள் இல்லாததால் போர் அடிக்கலாம். சிலருக்கு கிளைமாக்ஸ், தலைப்புக்கான அர்த்தம் பிடிபடாமல் போகலாம். இப்படி குறைகள் இருந்தாலும், சத்தம் இல்லாத சினிமாவை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு, மாறுபட்ட சினிமா காதலர்களுக்கு காந்தி டாக்ஸ் பிடிக்கும்
”லாக்டவுன்”
ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்தள்ள படம் லாக் ”டவுன்”. இப்படத்தின் கதை 2020ம் ஆண்டு தொடங்குகிறது. வேலை இல்லாமல் தத்தளிக்கும் ஹீரோயின் அனுபமா, தனது வேலை தொடர்பாக தனது ப்ரண்ட் அழைப்பின் பேரில் ஒரு பார்ட்டிக்கு போகிறார். அங்கே சரக்கு அடித்து நினைவு இழக்கிறார். அந்த சமயத்தில் அவரை யாரோ கற்பழிக்க, சில மாதங்கள் கழித்து தான் அந்த விஷயம் அனுபமாவுக்கு தெரிகிறது. கருவை கலைக்க முயற்சி எடுக்கும் நிலையில், இந்தியாவில் லாக்டவுன் தொடங்குகிறது. அந்த இக்கட்டான காலகட்டத்தில் தனது தோழி உதவியுடன் கருவை கலைக்க பல இடங்களுக்கு அலைகிறார். அவர் நினைத்தது நடந்ததா? கடைசியில் அனுபமா என்ன முடிவெடுத்தார் என்பதுதான் படத்தின் கரு. லாக்டவுனை மறந்து விட்ட நமக்கு இந்த பட காட்சிகள், அதன் நினைவுகளை கொண்டு வருகின்றன. வெறிச்சோடிய தெருக்கள், போலீஸ் கெடுபிடி, பணக்கஷ்டம், மனக்குழப்பம் என பல விஷயங்களை இதில் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர்.
வேலை கிடைக்காமல் தவிக்கும் பெண்ணாக அறிமுகமாகும் அனுபமா, பின்னர், கர்ப்பத்தை கலைக்க போராடுபவராக, அதனால் பல சிக்கலை எதிர் கொள்பவராக சிறப்பாக நடித்து இருக்கிறார். வீட்டில் விஷயத்தை சொல்ல முடியாமல், கருவை கலைக்க பணத்தை புரட்டி முடியாமல் தவிப்பவராக அவர் நடிப்பு ஓகே. ஒரு பெண்ணின் உளவியல் சிக்கல்களை, பிரச்னைகளை கையாளும் கேரக்டரில் கலக்கியிருக்கிறார்.
அவர் அப்பாவாக வரும் சார்லி, அம்மா நிரோஷா ஆகியோர் கொடுத்த கேரக்டரில் நன்றாக நடித்து இருக்கிறார்கள். அனுபமா தோழியாக வரும் ப்ரியா மனதில் நிற்கிறார். ஆனாலும், கதையும், கதையில் சொல்லப்படும் விஷயங்கள், கிளைமாக்ஸ் பெண்களாலே ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர்களை, மருத்துவ பணியாளர்களை தவறாக காண்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, கருவை கலைக்க ஒருவர் விதிக்கும் நிபந்தனைகள் , அடுத்து நடக்கும் சம்பவங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.
”க்ராணி”
ஒரு பழங்கால கிராமத்து வீட்டில் லண்டனில் இருந்து வந்த தம்பதிகள், 2 குழந்தைகளுடன் குடியேறுகிறார்கள். அந்த வீட்டுக்கு வரும் பாட்டி வடிவுக்கரசி, அந்த குழந்தைகளை கொன்று அவர்களின் இதயத்தை எடுக்க நினைக்கிறார். அதை வைத்து இளமை தரும் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கிறார். அதை தடுக்க நினைக்கிறார்கள் போலீஸ்காரர்களான சிங்கம்ச் புலியும், திலீபனும். கிராம மக்களும் பாட்டியின் சதித்திட்டம் அறிந்து தடுக்க வருகிறார்கள். இவர்களை மீறி பாட்டி இதயத்தை எடுத்தாரா? என்பது தான விஜயகுமாரன் இயக்கிய கிராணி படத்தின் கதை. கிராணி என்றால் தமிழில் பாட்டி என அர்த்தம்.
வடிவுக்கரசியை சுற்றியே இந்த கதை நகர்கிறது. வயதான கெட்டப்பில், கொஞ்சம் கொடூரமான கேரக்டரி்ல் அவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார். குழந்தைகளை கொல்ல அந்த வீட்டுக்குள் அவர் அலைவது, போலீஸ்காரர்களுடன் சண்டை ஆகியவற்றில் கலக்கி இருக்கிறார். போலீஸ்காரராக வரும் சிங்கம்புலி, தீலிபன் காட்சிகளும், குழந்தைகளை காப்பாற்ற அவர்கள் போராடுவதும் சிறப்பு. அந்த இதயத்தில் என்ன இருக்கிறது. அதை வைத்து எப்படி இளமை ஆகலாம் என்று சொல்லப்படும் பிளாஷ்பேக் கதையும், அதில் வரும் சம்பவங்களும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனாலும், தேவையில்லாத பல சீன்களால் கதையின் விறுவிறுப்பு குறைகிறது. முதற்பாதியை விட, இரண்டாம்பாதியில் விறுவிறுப்பு அதிகம். பின்னணி இசை மிரட்டல். அந்த பிரமாண்ட வீடு, அதில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை நன்றாக காண்பித்து இருக்கிறார்கள். பேய் கதை இல்லை. ஆனாலும், வடிவுக்கரசி வரும் காட்சிகள், அவரின் நடிப்பு மிரட்டல். திகில் கதையை, திரில்லர் கதையை விரும்புகிறவர்களுக்கு கிராணி பிடிக்கும்
”கருப்பு பல்சர்”
என்னிடம் கருப்பு பல்சர் இருக்கிறது என வருங்கால மனைவியிடம் பொய் சொன்னதால், தனது தொழில் போட்டியாளரான மன்சூர்அலிகானிடம் இருக்கும் கருப்பு பல்சரை வாங்குகிறார் ஹீரோ அட்டக்கத்தி தினேஷ். அந்த கருப்பு பல்சரில் ஒரு ஆவி இருக்கிறது. அது சிலரை பழி வாங்க நினைக்கிறது. இதற்கிடையி்ல் மதுரையில் இருக்கும் வில்லன் அஜய், அந்த பல்சரை அழித்து, தினேசை கொல்ல சென்னை வருகிறார். அவருக்கும் தினேசுக்கும் என்ன சம்பந்தம் இதுதான் கருப்பு பல்சர் கதை.
முரளிகிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு வீரன், சென்னையில் மார்டன் இளைஞன் என 2 மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார் அட்டக்கத்தி தினேஷ். ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட விஷயங்கள், போட்டிகள், ஜாதி பிரச்னை, சண்டை ஆகியவை சுவாரஸ்யம். கிராமத்து போர்ஷனில் காதல் சீன் செட்டாகி இருக்கிறது. அவருக்கும், பிராங்க்ஸ்டாருக்குமான காமெடி சுமார். மன்சூர்அலிகான் வரும் நேரம் கலகலப்பாக இருக்கிறது. பல்சர் பைக் உறுமுவது, சில அமானுஷ்ய செயல்களை செய்வது அச்சமூட்டுகிறது. ஹீரோயின் ரேஷ்மா காட்சிகள் கலர்புல். ஜல்லிக்கட்டு போட்டி, அடுத்த நடக்கும் சம்பவங்கள் கதைக்கு உயிர். அதேபோல் காளை மாதிரி கிளைமாக்சில் தினேஷ் போடும் சண்டையும் ரசிக்க வைக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி, ஆவியை புகுத்தியது புதுமை. அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு, அவரின் கேரக்டர் ஓகே. மற்ற சீன்களை குறைத்து. அந்த ஆவி, ஜல்லிக்கட்டு விஷயத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் படம் பெரிதாக பேசப்பட்டு இருக்கும்.
”மெல்லிசை”
ஒரு பிரைவேட் டிவி சேனல் நடத்தும் பாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு, அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறுகிறார் உடற்பயிற்சி ஆசிரியரான ஆடுகளம் கிஷோர். இது, அவர் பள்ளி பிரின்ஸ்பாலுக்கு பிடிக்காமல் போக, அவர் வேலை போகிறது. நண்பர்கள், குடும்பத்தினர் அவருக்கு ஆதரவு கொடுக்க, அந்த போட்டியில் அவர் ஜெயித்தாரா? அவர் குடும்பம் என்னவானது? என்பதை கிஷோர் மகன், மகள் பார்வையில் சொல்கிற கதையாக மெல்லிசை விரிகிறது.
இப்படத்தை திரவ் இயக்கி இருக்கிறார். குடும்ப தலைவர், பாசமுள்ள அப்பா, நல்ல பி.டி. வாத்தியார், போட்டியாளர் என பல இடங்களில் வழக்கம்போல் நடிப்பில் கலக்கி இருக்கிறார் கிஷோர். அவர் கேரக்டர், பேச்சு, செயல்கள் அவ்வளவு பாசிட்டிவ் ஆக இருப்பது படத்தின் பலம். குடும்பம், போட்டி, பள்ளியில் அவர் சந்திக்கிற விஷயங்கள், பிரச்னைகள், அவமானங்கள் உணர்வுப்பூர்வமானவை. அவர் மனைவியாக வருகிற சுபத்ரா, மகன், மகள் ஆகியோரின் நடிப்பும், ஒரு பாசக்கார குடும்பத்தை பார்ப்பது போல இருக்கிறது. அதேபோல் ஸ்கூல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அவ்வளவு இயல்பாக இருக்கிறது.
ஒரு குடும்பத்தலைவரின் பொறுமை, தியாகம், பாசம் என பல விஷயங்களை கதை சொல்கிறது. குறிப்பாக படமானது , குடும்பம், நண்பர்கள், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை அழகாக காண்பிக்கிறது. கிஷோர் மகன், மகள் வாழ்க்கை, அவர்களின் கனவு சம்பந்தப்பட்ட விஷயங்களும் டச்சிங். பாட்டு போட்டி சீன்களில் மட்டும் நாடகத்தனம் அதிகம். வில்லன் போர்ஷனும் கதையுடன் ஒட்டவில்லை. இசை சம்பந்தப்பட்ட படத்தில் பாடல்கள் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம். ஆனாலும், படத்தின் கதை, நடித்தவர்களின் நடிப்பு, சொல்கிற மெசேஜ் ஒரு நிறைவை தருகிறது. மெல்லிசை பார்த்தால் நம் குடும்பம், வீடு, நண்பர்கள் நினைவுக்கு வருவார்கள்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்












