முக்கியச் செய்திகள் தமிழகம்

தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை-சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு (TANTEA) சொந்தமான தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் செயலில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

1964 ஆம் ஆண்டுச் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து நிலங்களைப் பெற்று தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகம் (TANTEA) தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. தங்களது இரத்தத்தை வியர்வையாகச் சிந்திய மலையகத் தமிழர்களது கடின உழைப்பினால் உருவான ‘டேன்டீ’ நிறுவனம், 6 தேயிலை தொழிற்சாலைகள், மற்றும் 11 தேயிலை கோட்டங்களைக் கொண்டு, ஆண்டுக்கு 3.50 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி புரிகின்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்தது.

ஆனால், அங்குப் பணிபுரியும் தேயிலை தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்பு, குடிநீர், மின்சாரம், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைகூட ஏற்படுத்தித் தராததோடு, உயர்கல்வி முடித்த தேயிலைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பைக்கூட ‘TANTEA’ நிறுவனம் இதுவரை வழங்கவில்லை என்பது பெருங்கோடுமையாகும்.

அதுமட்டுமின்றி மற்ற தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைவிட மிகக்குறைந்த தொகையாக நாளொன்றுக்கு 345 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதும் மிகுந்த வேதனைக்குரியதாகும்.

இலாபகரமாக இயங்கிய பொதுத்துறை நிறுவனம், தற்போது பெரும் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, நிதிச்சுமை காரணமாக 1500 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.

தொழிலாளர் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து வெறும் 3000 ஆயிரமாகக் குறைத்ததன் மூலம், பல்லாயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டங்களைப் பராமரிப்பு இல்லாமல் காடுகளாக்க முனைப்புக் காட்டுவதும், குறிப்பிட்ட பரப்பளவில் மட்டும் நிரந்தரத் தொழிலாளர்களைப் பணி செய்ய வற்புறுத்துவதும் ‘தேயிலை கழகத்தை’ இழுத்துமூட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசும், ‘TANTEA’ நிர்வாகமும் இணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது.

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களையே தங்களது வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கும், மாற்றுத் தொழிற்வாய்ப்புகளுக்கும் எவ்வித உதவியும் செய்திடாத தமிழ்நாடு அரசு, திடீரென்று தேயிலைத் தோட்டங்களை விட்டு வெளியேற்றி, அவர்களது வாழ்வினை அழிக்க நினைப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு, பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘TANTEA’ நிறுவனத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, குத்தகை ஒப்பந்தத்தை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இலாபத்தில் இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள்-மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலை அளித்த முதல் எம்எல்ஏ!

Web Editor

400 பழங்குடியின குடும்பங்களுக்கு உதவிய பிரபல நடிகர்!

EZHILARASAN D

ஈரோடு இடைத்தேர்தல்: LiveUpdates

Jayasheeba