தேசிய திறனறித் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களை நடிகர் சூரி பாராட்டி பரிசளித்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேசிய திறனறி தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், அவர்கள் 12ஆம் வகுப்பை நிறைவு செய்தவுடன் அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த தேசிய திறனறி தேர்வில் பல பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றிருந்தனர் . அதில் குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 6 மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி, ஒரு வீடியோ பதிவு ஒன்றையும் நடிகர் சூரி வெளியிட்டுள்ளார். வென்ற மாணவர்களுக்குப் பணப் பரிசு, பங்கேற்ற மாணவர்களுக்கு பொருட்பரிசு, அத்தனை ஆசிரியர்களுக்கும் வெள்ளிப்பரிசு என பல பரிசுகளை தனது நண்பர்கள் மூலமாக அப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ள சூரி, மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேரில் சந்திக்க விரைவில் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த செய்தியையும், வீடியோவையும் சூரியின் நண்பரும், கத்துக்குட்டி இயக்குநருமான இரா சரவணன் தமது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தனை பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் இவ்வளவு மெனக்கெடுறீங்களே அண்ணே என அவர் கேட்டதற்கு “நாலு வார்த்தை பாராட்டிப் பேசுறதுல நமக்கு என்னண்ணே குறைஞ்சிடப் போகுது? நம்ம உழைப்பும் திறமையும் எல்லோராலும் பார்க்கப்படுதுங்கிற எண்ணம், அவங்களை இன்னமும் சிறப்பா ஓட வைக்கும். மற்ற மாணவர்களையும் ஆர்வப்படுத்தும். எல்லாத்தையும் தாண்டி அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையைப் பெரிதா உயர்த்தும்… அதுதான் முக்கியம்” என சூரி கூறினாராம்.
‘விடுதலை’ படத்தின் வெற்றியும், பரபரப்பும் இன்னமும் ஓயாத நிலையில், அடுத்த படத்தில் சூரி சுறுசுறுப்பாக நடித்து வரும் சூழலில்… நடிகர் சூரி செய்திருக்கும் இந்த செயல் பலரது கவனத்தை பெற்றுள்ளதோடு , அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.








