இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய திரைப்ப விருதுகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 51-வது தாதா சாகேப் பால்கே விருது பட்டியலை அறிவித்தார். இந்திய திரையுலகில் மிகச் சிறந்த பங்களிப்பைத் தந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றியவர் ரஜினிகாந்த். நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தொடர் முயற்சியால் 1975-ம் ஆண்டு இயக்குநர் பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் படங்களிலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார். திரையுலகில் பல புறக்கணிப்புகளையும் தாண்டி தன்னுடைய கடின உழைப்பால் மக்கள் மனதில் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்பட்ட ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. தமிழ் திரையுலகில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு இதற்கு முன்பு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது.







