மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மீது தீவிர பற்றாளராக இருந்த மயில்சாமி அவர்களின் மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வி கே சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக மீது மிகுந்த பற்றாளராக விளங்கிய நடிகர் மயில்சாமி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீது சொல்லிலடங்கா பக்தி கொண்டவர். எம் ஜி ஆரைத் தவிர வேறு யாரையும் என்னால் தலைவராக ஏற்க முடியாது என்று சொன்னவர். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக தீவிரமாக செயல்பட்ட மயில்சாமி, அம்மாவின் மறைவிற்கு பிறகு கட்சியில் மற்றவர்களின் செயல்பாடுகளால் அதிருப்திக்கு ஆளானார். இதனால் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவும், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுகவும் தற்போது இல்லை. அந்த கட்சி தற்போது மத்திய அரசிற்கு அடிமையாகி விட்டது என்று விமர்சனம் செய்து அதிமுகவை விட்டு வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு அரசியல் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொண்டு நடிப்பிலும், டப்பிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்த சிவ பக்தரான மயில்சாமி, நேற்று இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று, பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வரும் நிலையில், நடிகர் மயில்சாமியின் மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துளளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கலை உலகில் தனிக்கென தனி முத்திரை பதித்த நடிகர் மயில்சாமி மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்ட மயில்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகத்தினருக்கும் சக்தியையும் மன வலிமையையும் அளிக்க இறைவனை வேண்டிக் கொள்ளவதாக குறிப்பிட்டுள்ளார்.
மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வி.கே.சசிகலா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீதும், அதிமுக மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர் என கூறியுள்ளார். அவரது ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி என குறிப்பிட்டுள்ளார். உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படும் அன்பு நண்பருக்கு அஞ்சலி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து “சினிமாத்துறையில் தனக்கான தனிப் பெயரை பெற்றவர் மயில்சாமி. அனைவராலும் மதிக்கக் கூடியவராக செயல்பட்ட இவரின் இழப்பு, திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர்கள் எம் .எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், பாக்யராஜ், அருண் விஜய், ஆரியா ,வெங்கட் பிரபு, அருண் காமராஜ் உள்ளிட்டோரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா