மதுரையில் மகுடம் சூட்டிய நியூஸ் 7 தமிழின் “ஊரும் உணவும்” திருவிழா தற்போது ஓசூரில் மக்களில் மனங்களை விருந்தளிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிடித்தமான உணவுகளை ருசித்தும், கலை நிகழ்ச்சிகளை ரசித்தும் பொதுமக்கள் உற்சாகம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதி மதுரையில் ஊரும் உணவும் திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஓசூர் முனீஸ்வரர் சர்க்கிள் மைதானத்தில் பாரம்பரிய பறை இசையுடன் உணவுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவை தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த உணவு திருவிழாவிற்கு வருபவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும், பாரம்பரிய கலைகளை போற்றும் வகையிலும் மல்லர் கம்பம் சிறப்பு நிகழ்ச்சியும், நாட்டுபுற கலைஞர்களின் மயிலாட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம் குழந்தைகள் விளையாடுவதற்கு போட்டிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் கிடைக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மணப்பாறை முறுக்கு, ஆற்காடு மக்கன்பேடா, மதுரை மீன் பஜ்ஜி, முட்டை மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உணவுத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களில் மணிக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, சிறுவர்-சிறுமியர்களுக்கான பலூன் உடைக்கும் போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறுவர்களின் கண்கவர் நடனம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது. ஓசூர் முனீஸ்வரர் சர்க்கிள் மைதானத்தில், நியூஸ் 7 தமிழ் நடத்தும் பிரமாண்ட உணவு திருவிழா இன்று நிறைவடைய உள்ளது. இந்த உணவு திருவிழாவில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
- பி. ஜேம்ஸ் லிசா










