தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 80.
தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா. மேலும் இவர் தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பெயர் பெற்றவராக திகழ்ந்தார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், செயற்கை சுவாச கருவி மூலம் நடிகர் கிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கிருஷ்ணா வயது மூப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், உடல்நிலை பாதித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு தெலுங்கு திரைத்துறையினருக்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








