’ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்’ – டி.ஆர்.பி.ராஜா

மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”மாநில உரிமைகளுக்குப் பெருந்தடையாக இருப்பது ஆளுநர் என்கிற நியமனப் பதவி. அதனைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் போக்கு தொடர்வது கூட்டாட்சி முறைக்கு ஏற்றதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தீர்மானங்களை, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் கிடப்பில் போடுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்பதை 7 பேர் விடுதலைக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. இதற்குப் பிறகும், மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்.

உயர்கல்வி நிலையங்களைத் தன்னுடைய சங்கித்வா கொள்கைக்கான பிரச்சாரக் களமாக மாற்ற நினைக்கும் ஆளுநரின் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். அதன் முதற்கட்டமாக, திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதே சரியானத் தீர்வாக அமையும்.

நமது முதலமைச்சர் வலியுறுத்தியபடி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே கூட்டாட்சிக் கொள்கையை வலுப்படுத்தும். கழகத் தலைவர் அவர்களின் உன்னதமான இந்தக் கோரிக்கையை இந்திய ஒன்றிய அளவில் முன்னெடுப்பதில் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி விரிவான செயல்திட்டத்துடன் களமிறங்கத் தயாராக இருக்கிறது.” இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.