அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்.
கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை தனது தனித்துவமான நடிப்பின் மூலமும், தன் படங்கள் மூலமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி, இந்திய சினிமாவிற்கே பெருமைமிகு மனிதராக வலம் வந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல்ரீதியாக இமாலய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைபடத்தில் நடித்து வருகிறார்.
மும்முரமாக நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் எட்டியுள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இயக்குநர் எச் வினோத் ஆகியோருடன் கைகோர்த்து புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.
இதுதவிர கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரை வைத்து தனது சொந்த தயாரிப்பில் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இப்படி திரைத்துறையில் பல் துறை வித்தகராக வலம் வரும் கமல்ஹாசனை கௌரவ படுத்தும் வகையில் சர்வதேச அளவில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில், இந்த ஆண்டுக்கான 23வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது IIFA விருதுகள் வழங்கும் விழா கடந்த 27 ஆம் தேதியன்று அபுதாபியில் நடைபெற்றது. இந்திய திரைப்படங்களையும், இந்திய திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் இந்த விருது விழாவில், இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த பிரமாண்ட விழாவில், இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படும் என IIFA ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அசாத்திய திறமையால் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் சாதனையை பாராட்டும் விதமாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி, நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழங்க, கமல் விருதை பெற்றக்கொண்டார். கமல்ஹாசன் விருதை பெரும் போது அரங்கத்தில் இருந்த நடிகர் சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
- பி.ஜேம்ஸ் லிசா









