நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்பட பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு…

Actor Allu Arjun granted interim bail!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்பட பலர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த விழாவில் புஷ்பா 2 விழாவிற்கு பெரும் கூட்டம் கூடியதை பார்த்து திரையுலகமே ஆடிப்போனது.

இதனிடையே பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுதும் பல ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்னதாக நவ.4ஆம் தேதி இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனைப் பார்க்க பெரும் கூட்டம் கூடிய நிலையில், அல்லு அர்ஜூன் வருவதாக தகவல் வந்துள்ளது.

இதனால் தியேட்டர் முன்பு இன்னும் கூட்டம் கூடியது. அல்லு அர்ஜூன் வருவது முன்கூட்டியே தெரிவிக்கப்படாததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தியேட்டர் நிர்வாகமும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நெரிசல் அதிகமானது. இந்த நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் மயங்கினர். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் கவலைக்கிடமான நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்தததை அடுத்து, தியேட்டர் நிர்வாகத்தினர் மீதும், அல்லு அர்ஜூன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் திரையரங்க உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார்.

கைதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் மருத்துவ பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் நபர்கள் பொதுவாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையிலேயே அவரை அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்தது.

அதன்பிறகு உடனடியாக நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கின் விசாரணைக்கு அல்லு அர்ஜுன் ஒத்துழைப்பார். எப்ஐஆரை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது. வழக்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அர்ஜூன் தரப்பு கூறினர். ஆனால் அவர்களின் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காத நிலையில், அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து, “அல்லு அர்ஜுன் ஒரு நடிகர் என்பதால், அவரது உரிமையைப் பறிக்க முடியாது; ஒரு குடிமகனாக வாழ்வதற்கும் சுதந்திரத்துக்கும் அவருக்கு உரிமை உண்டு” என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் ஏற்கனவே திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.