“தக்காளியில் 2 துளைகள் இருந்தால், அது பாம்பு கடித்ததன் விளைவு.. சாப்பிட வேண்டாம்..” என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by ‘AajTak’ தக்காளியின் மேற்பரப்பில் இரண்டு துளைகளைக் காண்பீர்கள். இது போன்ற தக்காளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இது பாம்பு கடித்ததன் விளைவாக இருக்கலாம் என வைரலாகும் பதிவு குறித்த…

Is the viral post "If there are 2 holes in a tomato, it is the result of a snake bite.. don't eat it.." true?

This news Fact Checked by ‘AajTak

தக்காளியின் மேற்பரப்பில் இரண்டு துளைகளைக் காண்பீர்கள். இது போன்ற தக்காளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இது பாம்பு கடித்ததன் விளைவாக இருக்கலாம் என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “புகைப்படத்தில் தக்காளியின் மேற்பரப்பில் இரண்டு துளைகளைக் காண்பீர்கள். இது போன்ற தக்காளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இது பாம்பு கடித்ததன் விளைவாக இருக்கலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை கவனமாக வாங்கினால், அதில் சிறிய கருந்துளைகள் இருக்கும் சில தக்காளிகளைப் பார்த்திருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற தக்காளியை மக்கள் வாங்க மாட்டார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் இந்த வைரலான பதிவை நம்பினால், இந்த ஓட்டைகள் பாம்பின் பற்களின் அடையாளங்களாகவும், அத்தகைய அடையாளங்களைக் கொண்ட தக்காளி விஷமாகவும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வைரல் பதிவானது, “புகைப்படத்தில் தக்காளியின் மேற்பரப்பில் இரண்டு துளைகளை நீங்கள் காண்பீர்கள். இது போன்ற தக்காளியை எப்போது பார்த்தாலும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இது பாம்பு கடியின் விளைவாக இருக்கலாம். பாம்புகள் மற்றும் பிற ஊர்வன சில சமயங்களில் பசியின் காரணமாக தக்காளியைக் கடித்து, அவற்றை முட்டை என்று தவறாகக் கருதி அவற்றை விழுங்க முயல்கின்றன. மேலும் அவற்றை விஷமாக்குகின்றன. எனவே நீங்கள் தோட்டத்தில் இருந்து தக்காளியைப் பறிக்கும்போதோ அல்லது சந்தையில் வாங்கும்போதோ கவனமாக இருங்கள். உங்கள் எச்சரிக்கையானது பாம்புகளால் பழங்களில் செலுத்தப்படும் நச்சுப் பொருட்களை உட்கொள்வதிலிருந்து உங்களைக் காப்பாற்றும். ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், இதைப் படித்தவுடன் நீங்கள் தக்காளியை சாப்பிட பயப்பட ஆரம்பிக்கலாம் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? உண்மையை அறிய, இதுபற்றிய பல ஆய்வுகளை படித்து பாம்பு நிபுணர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளிடம் பேசப்பட்டது.

தக்காளியில் இந்த துளைகள் எவ்வாறு உருவாகின்றன?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தக்காளியில் உள்ள இந்த துளைகள் பழப்புழுக்களால் செய்யப்படுகின்றன. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) வேளாண் விஞ்ஞானி மருத்துவர் ஜாகிர் ஹுசைன், தக்காளியில் பொதுவாக இரண்டு காரணங்களால் இத்தகைய ஓட்டைகள் ஏற்படுவதாக நம்மிடம் தெரிவித்தார். முதலில், தக்காளியில் பரவும் பாக்டீரியா ஸ்பெக் என்ற நோயின் காரணமாக, அவை அழுகும். நாட்டிலேயே அதிக அளவு தக்காளி உற்பத்தி செய்யும் ஆந்திராவில் தற்போது இந்த நோய் பரவி வருவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவர் ஜாகிர் கூறுகையில், பழம் துளைப்பான் பூச்சிகள் தக்காளியில் கருப்பு புள்ளிகள் அல்லது துளைகளை உருவாக்குகின்றன. இதன் காரணமாக தக்காளி அழுக ஆரம்பித்து சாப்பிடத் தகுதியற்றதாகிவிடும். இவை சந்தைக்கு வருவதற்குள் அகற்றப்படுகின்றன. பாம்புகள் தக்காளியைக் கடிப்பதைப் பற்றி கேட்டபோது, ​​மருத்துவர் ஜாகிர், இது எப்போதாவது நடந்தாலும், இது ஒன்று அல்லது இரண்டு தக்காளிகளில் மட்டுமே நடக்கும். அதிக எண்ணிக்கையில் அல்ல.

பாம்புகள் தக்காளியை சாப்பிடலாமா?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மருத்துவர் அபிஜித் தாஸிடம் பேசப்பட்டது. பாம்புகள் மாமிச உண்ணிகள் என்றும் அவை தக்காளி அல்லது வேறு எந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்றும் அவர் கூறினார். தக்காளியில் இதுபோன்ற ஓட்டைகள் பூச்சிகளால் ஏற்படுகின்றன. பாம்பு கடியால் அல்ல என்றும் அவர் கூறினார். சில காரணங்களால் தக்காளியை பாம்பு கடித்தால் கூட அதில் விஷம் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர் தாஸ் கூறினார். பாம்புகள் கடித்த பிறகு, தங்கள் இரையைக் கொல்ல அல்லது கோபத்தில் ஒருவரைக் கடிக்கும்போது விஷத்தை வெளியிடுகின்றன.

பாம்பு கடித்த விஷமுள்ள தக்காளியை தற்செயலாக யாராவது சாப்பிட்டாலும், அதன் பலன் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பாம்பு விஷம் நேரடியாக ரத்தத்தில் சேரும் போதுதான் அதன் தாக்கம் இருக்கும் என்றார். அதாவது, பாம்பு கடித்த விஷமுள்ள தக்காளியால் ஒருவர் இறப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

துளைகள் கொண்ட தக்காளி ஆபத்தானது இல்லையா? 

தக்காளியில் புழுக்கள் இருக்கலாம், உள்ளே இருந்து அழுகலாம் என்பதால், அதில் துளைகள் உள்ள தக்காளியை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தக்காளியை கவனமாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பச்சையாக தக்காளியை சாலட்டில் சாப்பிடும்போது. இதே தவறான கூற்று சில நாட்களுக்கு முன்பு எகிப்து போன்ற சில நாடுகளில் வைரலாக பரவியதும் கண்டறியப்பட்டது. அதை மறுத்து அங்குள்ள ஊடக நிறுவனங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

Note : This story was originally published by ‘AajTak and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.