நடிகர் அஜித் நடித்து வெளியான திருப்பதி திரைப்படத்தில் அவர் ஓட்டிய பைக் ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் மற்றும் ஜெயலலிதா என 5 முதலமைச்சர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையை கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தான் சிவாஜி கணேசன், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வைஜெயந்தி மாலா, கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் திரையுலகிற்கு அறிமுகம் ஆயினர்.
திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஏவிஎம் நிறுவனம், கடந்த 77 ஆண்டுகளில் 178 படங்கள் வரை தயாரித்துள்ளது. ஸ்டுடியோவில் படப்பிடிப்பு தளத்தின் ஒரு பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரித்த படங்களில் இடம்பெற்ற கார்கள், திரைப்பட தயாரிப்புக்கு பயன்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவை இந்த மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பழைமையான திரைப்படக் கேமராக்கள், எடிட்டிங் யூனிட்டுகள், புரொஜெக்டா்கள், லைட்டுகள், பெரும் நடிகா்கள் பயன்படுத்திய வாகனங்கள், ஆடைகள், ஏவிஎம் தயாரித்த படங்களின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
https://twitter.com/avmproductions/status/1702971758922584321
ஏவிஎம் தயாரிப்பில் அஜித் நடித்த திருப்பதி என்ற படத்தை பேரரசு இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஓட்டும் பைக்குகள் எப்போதுமே கவனம் பெறும் வகையில் இருக்கும். அந்த வகையில், திருப்பதி படத்தில் நடிகர் அஜித் ஓட்டிய பைக் (பாஜாஜ் பல்சர் 180சிசி 2004) ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.







