“ரூ.2000 நோட்டுகளை இனி வாங்க மாட்டோம்” அமேசான் அதிரடி அறிவிப்பு..!

டெலிவரி செய்யும் பொருட்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும்…

டெலிவரி செய்யும் பொருட்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தபோது 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் அந்த நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்பட்டாலும், பின்னர் அதனை அச்சிடுவதையும் புழக்கத்தில் விடுவதையும் ஆர்பிஐ குறைத்துக் கொண்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த மே 19-ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தபோது,  அமேசான் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து 2,000 ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தது. ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு இன்னும் சில நாட்களே இருக்கும் பட்சத்தில், செப்டம்பர் 19-ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதில்லை என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. 87% நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், 13% நோட்டுகள் சில்லறையாக மாற்றிக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.