‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடர்பான முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலர் ரீட்டா வசிஷ்டா என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கான மசோதாவை வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.







