பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில், மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குரல்கொடுத்து வரும் ஐயா ஸ்டான் சாமியின் மறைவு செய்தி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஐயா ஸ்டான் சுவாமி அவர்களைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு!https://t.co/GQyArwU3iC pic.twitter.com/DtmZUArnGb
— சீமான் (@SeemanOfficial) July 5, 2021
பீமா கொரோகான் வழக்கின் கீழ் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் மூலம் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்டு, பல மாதங்கள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், தனது வயது மூப்பையும், உடல்நலிவையும், தனது தரப்பு நியாயத்தையும் பலமுறை அவர் எடுத்துக்கூறியப் பிறகும்கூட, விடுவிக்காது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் போக்கோடும் அவரைத் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி அவரது உடல்நலனைக் குன்றச் செய்த பாஜக அரசின் செயல்பாட்டின் விளைவாகவே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.
இதைத் தடுத்திருக்கவேண்டிய நீதித்துறையும் கைவிட்டது தான் பெருங்கொடுமை. இதே வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள, ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாத் போன்றவர்களின் நிலை பெரும் கவலையைத் தருகிறது. சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும் சமூகத்திற்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, சட்டத்தைக் கொண்டு அவர்கள் மீது கொடுங்கோல் போக்கினைக் கட்டவிழ்த்து விடும் மோடி அரசின் சனநாயகவிரோதச் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. என சீமான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.