முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

யாரை துணைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யவுள்ளது திமுக தலைமை?


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

கடந்த 2 ஆண்டுகளில் திமுகவிலிருந்து விலகும் இரண்டாவது துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் என்ற நிலையில், ஏன் அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார்? கட்சித் தலைமையும் காரணமா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை…

துணைப் பொதுச் செயலாளர்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுகவில் பொதுச்செயலாளர் தனக்கு உதவியாக எத்தனை துணைப் பொதுச் செயலாளர்களையும் நியமித்துக் கொள்ளலாம் என்பது திமுகவின் விதியாக இருக்கின்றது. திமுகவின் கட்சி விதிப்படி, 3 துணைப் பொதுச்செயலாளர்கள் இருந்து வந்தனர். ஒருவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என மூன்று பேர் நியமனம் குறித்த வரையறை இருந்தது.

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுக் குழுவின் போது திமுக சட்டத் திட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலாளர்களாக சற்குணப் பாண்டியன், வி.பி. துரைசாமி, ஐ. பெரியசாமி ஆகியோருடன் சுப்புலட்சுமி ஜெகதீசனனும் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2020 இல் வி.பி. துரைசாமியும், 2022 இல் சுப்புலட்சுமி ஜெகதீசனும் விலகியுள்ளனர். 2 ஆண்டுகளில் 2 துணைப் பொதுச் செயலாளர்கள் விலகலை எதிர்கொண்டுள்ளது திமுக. தனக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என 2020 திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து அக்கட்சியின் துணைத் தலைவராக உள்ளார் வி.பி. துரைசாமி.

தற்போது விலகியுள்ள சுப்புலட்சுமி, மன நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு துணைப் பொதுச் செயலாளர்கள் இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைப் பொதுச் செயலாளராக இருந்து 2016இல் மறைந்த சற்குண பாண்டியனும், வயது முதிர்வின் காரணமாக தனது பதவியை கனிமொழிக்கு அளிக்க வேண்டும் என அப்போது தலைவராக இருந்த கருணாநிதியிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விலகலுக்கான காரணம் என்ன?

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுயியில் 2021 தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளில் தோல்வியடைந்த சுப்புலட்சுமி, தனது தோல்விக்கு கட்சி நிர்வாகிகளே காரணம் என வருத்தப்பட்டதுடன், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமைக்கு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வேதனை, உடல்நல பாதிப்புகள், வயது காரணமாக பதவியிலிருந்தும், கட்சியிலிருந்துமே விலகும் முடிவை எடுத்துள்ளார்.

தலைவருக்கும் தொண்டர்க்கும் இடைவெளி

2 ஆண்டுகளில் 2 துணைப் பொதுச் செயலாளர்கள் திமுகவில் விலகல் முடிவை எடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தத் தவறவில்லை. முன்னணி தலைவர்களை திமுக தலைமை நடத்துகிற விதத்தால் மனச் சங்கடத்திற்கு உள்ளாகி விலகுவதாகவும், திமுகவில் கட்சித் தலைவருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறார் திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து விலகி, பாஜகவில் துணைத் தலைவராக உள்ள வி.பி. துரைசாமி.

சுப்புலட்சுமியின் முடிவு

அதனை மறுக்கும் திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “பதவி நீட்டிப்பு வேண்டியதில்லை என்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியிருக்கலாம். விலகல் என்பது சுப்புலட்சுமி ஜெகதீசன் எடுத்த முடிவு. திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேர்தலில் தோற்றுப் போனவர் வி.பி. துரைசாமி. வெற்றி தன்னை தேடி வரும் என்று நினைத்தவர் வி.பி. துரைசாமி. திமுக, அதிமுக, திமுக என மாறி மாறி வந்தவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டது.” என்கிறார்.

கனிமொழிக்கு வாய்ப்பு?

திமுகவின் சட்ட விதிப்படி மகளிர் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற நிலையில், யார் அந்த மகளிர் என்ற கேள்வி எழுகிறது. 2016 இல் மறைந்த சற்குண பாண்டியன், அவர் உயிரோடு இருந்தபோதே தனது பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், அதனை கனிமொழிக்கு வழங்க வேண்டும் என அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் வலியுறுத்தியிருந்தார். தொண்டர்கள் அணுகக்கூடிய, எல்லோருடனும் இனிமையாக பழகுபவரும், ஆளுமை மிக்கவருமான திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினாலும், அதில் கனிமொழிக்கு உடன்பாடில்லை என கூறப்படுகின்றது.

யாருக்கு வாய்ப்பு?

மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் உள்ள கீதா ஜீவன், மருத்துவ அணியைச் சேர்ந்த பூங்கோதை, டாக்டர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மட்டுமல்லாமல், மகளிர் அணியைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன், மகளிர் அணியைச்சேர்ந்த சல்மா, தமிழரசி உள்ளிட்டோருடன் வேறு சிலரின் பெயர்களும் பரிசீலிக்கப்படலாம் என திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் திமுகவில் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. யார் பெயரை திமுக தலைவர் தேர்வு செய்யப்போகிறார் என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும்.

-இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

“அதிமுகவும், பாஜகவும் மத அரசியல் செய்கின்றன” – உதயநிதி விமர்சனம்

Jayapriya

நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் 9 பேர் குழு: முதலமைச்சர் உத்தரவு!

EZHILARASAN D