தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் பட்ஜெட், இப்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்றவையாக மாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
நடப்பு ஆண்டில் 2500 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலமாக மாற்றுதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரியசக்தி பம்பு செட்கள் அமைத்தல், பால் உற்பத்தியைப் பெருக்குதல் இந்த திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்.
கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு ஆகிய துறைகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும்
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்; 10 லட்சம் ஹெக்டர் இருபோக சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.







