“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்த நிலையில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்சேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.