வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயம் தொடர்பாக குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் டெல்லியில் இருந்தவாறு பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது, இயற்கை விவசாயத்துக்கான மாபெரும் இயக்கம் வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார். இந்த மாற்றத்தில் விரைவில் விவசாயிகள் இணைவார்கள் என்றும் இதன் மூலம் இயற்கை விவசாயத்தின் பலன்களை விவசாயிகள் அறுவடை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இலக்கை அடைய நாட்டு மக்கள் உறுதி எடுத்துவிட்டால், அவர்களின் வழியை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்த பிரதமர் மோடி, மிகப் பெரிய காரியங்கள் கூட மக்கள் பங்களிப்பால் வெற்றியை உறுதி செய்யும் குறிப்பிட்டார்.
இதற்கு டிஜிட்டல் இந்தியா திட்டமே ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார். கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதல்ல என அடிக்கடி கூறப்படுவதுண்டு என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, கிராம மக்கள் தற்போது மாற்றத்தை கண்டிருப்பதோடு, மாற்றத்தை வழிநடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
இயற்கை விவசாயம் மிகப் பெரிய வாய்ப்பு என தெரிவித்த பிரதமர், இயற்கை விவசாயத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நீடித்த நிலையான வளர்ச்சியையும் தூய உணவுப் பொருட்களையும் பெற முடியும் என்றார்.
பல நூற்றாண்டகளாக இயற்கை விவசாயத்தில் உலகிற்கு வழிகாட்டிய நாடு இந்தியா என பெருமிதம் தெரிவித்த அவர், ஆயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரிய அறிவை நாம் கொண்டிருக்கிறோம் என்றார்.
இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் நாம் நமது பூமித்தாய்க்கு சேவை செய்பவர்களாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகவும் இருப்போம் என்றும் அதோடு, நமது கோமாதாக்களும் பலன் பெறும் என்றார்.









