187 புராதான சிலைகளை மீட்டு சாதனை: சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் குறித்து டிஜிபி பெருமிதம்

சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் 187 புராதான சிலைகளை மீட்டு சாதனை படைத்துள்ளனர் என கும்பகோணத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட…

சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் 187 புராதான சிலைகளை மீட்டு சாதனை படைத்துள்ளனர் என கும்பகோணத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு கும்பகோணம் சென்றார். அங்கு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், சிலை திருட்டு தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 30 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் மற்றும் ரிவார்டுகளை சைலேந்திரபாபு வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்ட சிலைகளைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசிய சைலேந்திரபாபு, கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் 187 புராதான சிலைகளை மீட்டு சாதனை படைத்துள்ளனர் என்றும், குறிப்பாக 1962 ஆம் ஆண்டு களவு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ளது என்றும்,இந்த சிலைக்கு விலை மதிப்பிட முடியாது எனவும் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகள் மீட்கப்பட உள்ளது.

இதற்காக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த குழுவினர் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நமது புராதன சிலைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மீட்கப்பட்ட சிலைகளை பத்திரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் இதுவரை 300 சிலைகள் இதுபோல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இதனால் குற்றங்கள் வெகுவாக குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக கணினியை திறம்பட இயக்கக்கூடிய நபர்கள் உதவியுடன் தனி அணி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார். அதோடு தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் பேசினார்.

மேலும் காவல் துறையினரின் காவலன் செயலியை செல்போன் பயன்படுத்தும் அனைத்து நபர்களும் பயன்படுத்த வேண்டும் எனவும் சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார்.இதன் மூலம் பெண்கள் பாதுகாப்புடன் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.