முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை நடத்த மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பெரியார், அண்ணா பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டு தோறும் அக்கட்சி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா அண்ணாவின் பிறந்த தினமான இன்று விருதுநகரில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பாக கட்சி பணியாற்றிய, திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக முப்பெரும் விழா  தொண்டர்கள் எழுச்சி பெறக்கூடிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதாகக் கூறினார். திமுகவினர் கட்சிக்காரர்கள் அல்ல கொள்கைக்காரர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். தலைமை தொண்டனாகத்தான் தாம் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பதாக கூறிய அவர், இனி திமுகதான் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் என்று கூறினார். திமுகவின் ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியல்ல ஒரு இனத்தின் ஆட்சி என்றும் பெருமிதத்தோடு  முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரித்துப்பார்ப்பதுதான் ஆரியமாடல், ஆனால் அதற்கு நேர் எதிரான திராவிட மாடல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற தத்துவத்தை கொண்டது என அவர் கூறினார். அந்த திராவிட மாடல் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுவருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.  திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு எல்லாம் வளங்களும் கொண்டதாக மாறி வருவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடுதான் அதிக பங்கு வகிப்பதாகக் கூறினார். பட்டினி சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும், இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானத்தைவிட தமிழ்நாட்டின் சராசரி தனி நபர் வருமானம் அதிகமாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். அண்ணா பிறந்த நாளான இன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தது குறித்தும் முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியா முழுமைக்குமான கடமை திமுகவிற்கு இருப்பதாக தெரிவித்த  அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,  நாடு ழுழுமைக்கும் சமூக நீதியையும், சமதர்மத்தையும் பரபரப்ப வேண்டும் என்றார். தமிழ்நாடு மட்டும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் போதாது, அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், மத்திய  அரசு மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார். ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை நடத்த மத்திய  அரசு முயல்வதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாதும் என்றும் அவர் சாடினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என முப்பெரும் விழாவில் சூளுரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான தொடக்கமாக விருதுநகர் திமுக முப்பெரும்  விழா அமைந்துள்ளதாக தெரிவித்தார்.  முப்பெரும் விழாவை சிறப்பாக மாநாடு போல் நடத்தியிருப்பதாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

G SaravanaKumar

‘தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’

Arivazhagan Chinnasamy

“மருந்தியல் கல்வி, ஆய்வுக்கழத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்துக“ – எம்.பி வலியுறுத்தல்

Halley Karthik