இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 13 ஆயிரத்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று 10 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இன்று மீண்டும் 13 ஆயிரத்தை கடக்க உள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 286ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 591 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் சத்தீஸ்கரில் 4 பேர், டெல்லியில் 5 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 2 பேர், கர்நாடகாவில் 3 பேர், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவர் மற்றும் மகாராஷ்டிராவில் 6 பேர், ராஜஸ்தானில் 2 பேர், கேரளாவில் 2 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மொத்த எண்ணிக்கை 44,261,476 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 419 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








