ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

ஆர்டர்லி முறை ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.   காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த…

ஆர்டர்லி முறை ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

 

காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

அப்போது நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை எனவும், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை என தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் ஒரு உதவியாளர் தேவை. ஆனால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக கவலை அளிக்கிறது என அதிருப்தி தெரிவித்ததுடன், ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகாரளித்தாலும் அவர்கள் நசுக்கப்படுகின்றனர் என வேதனை தெரிவித்தார். ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு, காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப்பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. ஒரு காவல் உயர் அதிகாரி வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்த்ப்பட்டால் மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ பி எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், அதனை டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

 

மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது தெரிகிறது என
நீதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். குறிப்பாக பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்படக் கூடாது என்று தெரிவித்த நீதிபதி, உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் உள்ள வாகனங்களும், முன்னேறிய நடைமுறையும் தவறாக பயன்படுத்தபடக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.