“ஜம்மு – காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்பை வழங்கியுள்ளன.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது…

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்பை வழங்கியுள்ளன. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.  அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு,  ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை,  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன் நடைபெற்றது.

வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று (11.12.2023) தீர்ப்பளித்தது. இதில், 3 விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.  தலைமை நீதிபதி சந்திரசூட்,  நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும்,  நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.  நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளிலும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் சேர்ந்து வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு:

  • 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது சரியான நடவடிக்கையே.
  • சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்கான குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை உறுதி செய்கிறோம்.
  • ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பு சபையின் ஆலோசனை கேட்டு பின்பற்றப்பட வேண்டிய அவசியமில்லை.
  • ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சபை ஒரு தற்காலிக அமைப்பே.
  • அரசியலமைப்பு சபையின் பரிந்துரை குடியரசு தலைவரை கட்டுப்படுத்தாது.
  • பிரிவு 370 ரத்து செய்த மத்திய அரசின் முடிவை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
  • 370-ன் உட்பிரிவு (1) (d) பயன்படுத்தி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் செயல்படுத்த மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை.
  • எனவே இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மத்திய அரசின் ஆலோசனைகளை பெறுவது தவறல்ல.
  • ஜம்மு -காஷ்மீரில் செப்டம்பர் 2024 க்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்.
  • அதே வேளையில் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதா என்ற கேள்வியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுகிறோம்.
  • ஜம்மு-காஷ்மீர் இந்திய யூனியனில் இணைந்த போது இறையாண்மை அல்லது இந்திய இறையாண்மையின் ஒரு அங்கத்தை தக்க வைத்துக் கொண்டதா? என்ற கேள்வி எழுகிறது.  ஆனால்,  ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இறையாண்மையின் கூறுகளைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனை அடுத்து நீதிபதி எஸ்.கே.கவுல் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

  • 370 என்பது தற்காலிக நடவடிக்கை.
  • எனவே 370ஐ ரத்து செய்தது சரியான நடவடிக்கையே.
  • காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியின்போது நிலையற்ற தன்மை ஏற்பட்டது. அப்போது மக்களின் ஒரு பகுதியினர் இடம்பெயர்ந்தனர். அப்போது அங்கு ராணுவத்தை வரவழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் நமது நாடு ஆபத்தை எதிர்கொண்டது.  இந்த கிளர்ச்சிக்கு அம்மாநில மக்கள் பெரும் விலை கொடுத்துள்ளனர். மேலும் தலைமுறை தலைமுறையாக அம்மக்கள் அனுபவித்த வலி, அதிர்ச்சிகள் பெரும் கொடுமையாது எனவே இந்த மாநிலத்திற்கு ஒரு அமைதி தேவை.

இவ்வாறு நீதிபதி எஸ்.கே.கவுல் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.