மாநில மொழியில் மருத்துவக் கல்வி பயிற்றுவிப்பதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ஹிந்தியைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதன் நோக்கம் நேர்மையானதாக இருந்தால், அது வரவேற்கத்தக்கது ஆகும்.
அனைத்து மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம், மாநில மருத்துவ கவுன்சில்கள், மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் பேசி வருவதாக உயர்நிலைக் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப படிப்புகளும் தமிழ்நாட்டில் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் உறுதியான கொள்கை. தமிழக அரசுடன் இணைந்து தமிழில் தரமான மருத்துவ நூல்களை தயாரித்து, தாய்மொழியில் மருத்துவப் படிப்பு வழங்கப்பட்டால், தாய்மொழிக வழிக்கல்வியை உறுதி செய்யும் பயணத்தில், அது ஒரு மைல்கல்லாக அமைவது உறுதி.
தாய்மொழிவழி கற்பித்தலுடன் ஆங்கில வழி கற்பித்தலும் தொடரும் என்று மத்திய அரசு கூறியுள்ளதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் மாநில மொழியில் மருத்துவக் கல்வி என்பது நடைமுறைக்கு வந்தால், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும்.
2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமார் 7,200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களில் சேரும் மாணவர்கள் பெரும்பான்மையினர் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் தான் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். இது போன்ற சூழலில் மாநில மொழியில் மருத்துவக் கல்வி என்பது சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும், மாநில மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுவது தான் சரியானதாக அமையும்.
இதற்கு ஒரே தீர்வு மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவ கல்வி திட்டத்தை விரைவாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழை கட்டாய பயிற்று மொழியாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.







