நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் இன்று

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், முதலில் மலையாளத்…

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், முதலில் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

 

பின்னர் 2013 ல் வெளியான கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் இன்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில்
மோகன்லால், விஜய்,மகேஷ்பாபு,விக்ரம், சிவகார்த்திகேயன்,என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்த அனைத்து திரைப்படங்களும் அவருக்கு வெற்றிப் படமாகவே அமைந்தது. தமிழ் திரையுலகையடுத்து தெலுங்கிலும் நடிக்க தொடங்கிய கீர்த்தி சுரேஷ் அங்கும் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். 

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “நடிகையர் திலகம்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் தத்ரூபமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சாவித்ரியை கண்முன்னே கொண்டுவந்து காட்டினார்.

நடிகையர் திலகம் படத்தினால் பல்வேறு தரப்பினால் பாரட்டப்பட்ட கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். 

நடிகையர் திலகம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் பெண் குயின் திரைப்படத்தில் அதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான குட்லக் சகி, மிஸ் இந்தியா, மரக்கார், அண்ணாத்தே, ரங் தே, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான சாணி காகிதம் திரைப்படத்தில் சிறந்த இயக்குனராக கொண்டாடப்படும் செல்வராகவன் முதன்முறையாக நடிகராக களமிறங்கி இருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து தனது நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறு தென்னிந்தியாவில் அனைவரும் விரும்பும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் தன்னை நிலைநாட்டி வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

– பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.