“அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை கைவிடுக!” – நயினார் நாகேந்திரன்

அரசுப் பேருந்து சேவைகளை ரத்து செய்யும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்தவும், டீசல் செலவைக் குறைக்கவும் தமிழகம் முழுவதும் பல பேருந்துச் சேவைகளை நிறுத்த தவெக அரசு திட்டமிட்டு வருவதாகவும், ஏற்கனவே விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் வார நாட்களில் 136 பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2000-ஆம் ஆண்டில் கொண்டு வந்த ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் மூலம் கிராமங்களுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, இன்று அனைத்து நகரங்களையும், கிராமங்களையும் இணைக்கும் வகையில் தரமான சாலைக் கட்டமைப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தற்போதைய தவெக அரசு திடீரென பேருந்து சேவைகளை நிறுத்துவதால் கிராமப்புற மாணவர்களும், கூலித் தொழிலாளர்களும் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.

அரசுப் போக்குவரத்து என்பது வணிக ரீதியான லாப-நஷ்டத்தைப் பார்க்கும் துறையல்ல; அது சாமானிய மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சேவைத் துறையாகும். ‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று முழங்கிவிட்டு, தவெக அதிகாரத்திற்கு வந்த 100 நாட்களிலேயே ஏழை, எளிய மக்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ரத்து செய்யப்பட்ட அனைத்துப் பேருந்துச் சேவைகளையும் உடனடியாக மீண்டும் இயக்குவதோடு, மேலும் சேவைகளைக் குறைக்கும் முடிவையும் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.