சிறுவரகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த தேசிய அளவில் திட்டம் வகுக்கக் கோரிய பொது நல மனுவின் சாராம்சங்களை மத்திய அரசு கருத்தில் கொள்ளுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கீர்த்தி துவா மற்றும் குழந்தைகள் நலமருத்துவர் சரத் குப்தா ஆகியோர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், சமூக ஊடகங்கள் பாலியல் ரீதியான வெளிப்படையான பல உள்ளடக்கங்களை வெளியிட்டு வருகின்றன. இது சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறார்களை பாதிக்கின்றது. மேலும், இளைஞர்களிடையே சமூக ஊடக அடிமைத்தனம் மற்றும் மனநல சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. அதுபோல, டிஜிட்டல் மோகத்தால் குழந்தைகளும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர், இதனை இந்தியாவின் பொருளாதாரம் ஆய்வறிக்கையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
எனவே இதனை தடுக்கும் பொருட்டு, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும், இரவு நேரங்களில் சிறார்கள் இணையத்தைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிப்பது, இணையத்தை பயன்படுத்த கட்டாய வயது சரிபார்ப்பு முறைகள், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை கடுமையாக அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலியா ,கனடா, பிரான்ஸ், இந்தோனேசியா, ஐக்கிய அமீரகம், டென்மார்க் கிரீஸ் இத்தாலி ஆகிய நாடுகளில் இணையதள பயன்பாட்டிற்கு இருக்கும் கட்டுப்பாடுகளை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வி.காமேஷ்வர் ராவ் மற்றும் மன்மீத் ப்ரித்தம்சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் , சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிப்பது என்பது அரசின் கொள்கை சார்ந்த விசயம் என்பதால் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை பிறப்பிக்கவோ, காலக்கெடுவையும் நிர்ணயிக்வோ முடியாது. அதேவேளையில், இந்த பொதுநல மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளையும் மனுதாரர்கள் அளித்துள்ள ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய முறையில் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கலாம் என அறிவுறுத்தினர்.




