விளம்பர விதிகளை மீறியதற்காக, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 163.62 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும் என டெல்லி அரசின் செய்தி மற்றும் விளம்பர இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விளம்பரக் கொள்கையை கெஜ்ரிவால் அரசு மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2016ல் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், விளம்பரக் கொள்கையில் தவறாகக் கண்டறியப்பட்ட விளம்பரங்களுக்கு செலவழித்த தொகையை மதிப்பிடுமாறு உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவிடம் டெல்லி துணைநிலை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, டெல்லிக்கு வெளியே ஊடகங்களில் விளம்பரம் செய்ததற்காகவும், விளம்பரங்களில் ‘ஆம் ஆத்மி’ என்று குறிப்பிட்டதற்காகவும், மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த முதலமைச்சரின் கருத்துகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அரசு விளம்பரங்களில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து விளம்பரப்படுத்தியதாகவும் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், நான்கு வகை விளம்பரங்களுக்காக கெஜ்ரிவால் அரசு ரூ.97 கோடி செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சியை பிரதானப்படுத்திய விளம்பரங்களை அரசு விளம்பரமாக கூறி பிரசுரித்துள்ளதால் அந்த தொகை முழுவதையும் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்க தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லி அரசின் செய்தி மற்றும் விளம்பர துறை இயக்குனரகம் ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 நாட்களுக்குள் ரூ.163.62 கோடியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட தொகை ரூ.99.31 கோடி மற்றும் வட்டி ரூ.64.31 கோடி என மொத்தம் 163.63 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அரசு அதிகாரி, ஆம் ஆத்மி அந்த தொகையை செலுத்தவில்லையெனறால் கட்சிக்கு சொந்தமான சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சி துணைநிலை ஆளுநர் பிறபித்த உத்தரவு செல்லாது என கூறிவருகிறது. இதுதொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், ”பணத்தை மீட்பதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களின் திட்டங்களை டெல்லியில் விளம்பரப்படுத்துகின்றனர். இதன் மதிப்பு 22,000 கோடி ரூபாய் இருக்கும்” என தெரிவித்தார்.







