முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பல்வேறு களேபரங்களுடன் ஆரம்பித்த இந்த கூட்டத்தொடர் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது.
நான்காவது நாளான இன்று பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, திருவிடைமருதூர் சட்டமன்ற கோவி செழியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால் அதற்கு முழு காரணமும் திமுக ஆட்சி தான் என பேசினார்.
மேலும் பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால் அதற்கும் திமுக அரசு தான் காரணம் எனவும் அவர் கூறினார். அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் உள்ளிட்ட அனைவரும், நடந்தே சென்று தமிழை வளர்த்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்த்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும், தேவாரம் மற்றும் திருவாசகம் ஒலிக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் திமுக அரசு தான் எனவும் பேரவையில் உறுப்பினர் கோவி செழியனுக்கு கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.








