யு.பி.ஐ. ஐடியை பயன்படுத்தி இனி மேல் வெளிநாடுகளிலும் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியை போன் பே அறிமுகப்படுத்தியுள்ளது.
டீ கடை முதல் ஷாப்பிங் மால் வரை தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. அந்த வகையில், கூகுள் பே மற்றும் போன் பே மூலம் அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. மொபைல் எண் மூலமும், கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்வது மூலமும் வங்கிக் கணக்கில் இருந்து வியாபாரிகளுக்கு நேரடியாக பணம் செலுத்த முடியும்.
இந்நிலையில், போன் பே புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. போன் பே செயலியில் உள்ள யு.பி.ஐ. ஐடியை (UPI) பயன்படுத்தி வெளிநாடுகளிலும் இனி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். NIPL நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.
பயனர்கள் UPI இன்டர்நேஷனல் செயலியில் தங்களுடைய வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். பின்னர், தங்கள் UPI பின்னை செலுத்தி பயனர்கள் பயன்படுத்தலாம். நம்முடைய பயனர்கள் இந்திய வங்கிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது, பணத்தைப் பெறும் வெளிநாட்டு வணிகர்களுக்கு உள்ளூர் நாணய மதிப்பில் பணம் செலுத்தப்படும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு சாதனங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளில் ‘யுபிஐ இன்டர்நேஷனல்’ வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து போன் பே இணை நிறுவனர் ராகுல் சாரி கூறுகையில், யுபிஐ இன்டர்நேஷனல் என்பது நிச்சயம் ஒரு கேம்சேஞ்சராக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அங்குள்ள கடைகளில் போன் பே மூலம் பணம் செலுத்தலாம். மேலும், வருங்காலத்தில் பல்வேறு நாடுகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
-ம.பவித்ரா








